படிக்கும் போது வகுப்பில் முதல் அல்லது இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்கும் நான், அதிகம் ஆசைப்பட்டது நிறைய படிக்கவேண்டும் என்பதே. ஏதோ ஒரு தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்து ரேன்க் கீழே போய்விட்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து வீட்டில் உள்ள அத்தனை பேரையும் காரணம் அவர்கள் தான் குறை சொல்லி அமர்களம் செய்துவிடுவது வாடிக்கை.

படிப்பிற்கு பொறாமை வேண்டும் என்பார்கள் எனக்கு கொஞ்சம் அதிகமே. அதிகமாக மதிப்பெண் யாராவது எடுத்துவிட்டால் அவர்கள் எனக்கு விரோதிதான்.. சிறுபிள்ளை தனமான இந்த எண்ணம் இன்னமும் என்னை விட்டு போகவில்லை என்பது நினைத்தால் எனக்கே சில சமயம் அசிங்கமாக இருக்கும். ஆனால் அவர்களால் முடிகிறது என்னால் ஏன் முடியவில்லை என்று முட்டி மோதி படித்து முந்திவிடுவது என்று முடிவுடன் இருப்பேன்.

என்னுடைய அப்பா இறக்கும் போது எனக்கு 14-15 வயது, என்னை டாக்டர்க்கு படிக்க வைக்க வேண்டும் என்று இன்ஸ்ட்டுருமென்ட் பாக்ஸ் எல்லாம் வாங்கி வைத்து இருந்தார். ஆனால் அவரின் இறப்பு என் படிப்பை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லல.

என் அப்பாவின் அம்மாவும் அப்பாவுமே என்னை தொடர்ந்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். 10ஆவது முடித்தவுடன் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். நானும் ஆயாவிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்து நல்ல மாப்பிள்ளை வரும் வரை என்னை படிக்க வையுங்கள் என்று கேட்டேன். அவர்களுக்கு நான் பாரமாக இருக்கிறேன் என்று மட்டும் எனக்கு தெரிந்தது. என் அண்ணகளை அவர்கள் பாரமாக நினைக்கவில்லை. ஆண் குழந்தைகள் எப்படியும் பிழைத்து கொள்வார்கள் என்பார்களே அன்றி என்னை பற்றிய கவலை அவர்களின் வயதான காலக்கட்டதில் வாட்டி எடுத்ததை நான் உணர்ந்தேன். ஆனாலும் திருமணத்தில் எனக்கு இஷ்டம் இல்லல.

மிகவும் அடம் பிடித்ததால், சித்தப்பா வீட்டிற்க்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். ஆனால் படிப்பு தொடரும் இடைவேளையில், என்னை வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்லி உறவினர்கள் கட்டாயப்படுத்தியதில், நான் பத்தாவது முடித்தவுடன், ஒரு துணி தைக்கும் கம்பெனியில் தையல் வேலைக்கு சேர்ந்தேன்.

என் வயது உடைய என்னை கட்டாயப்படுத்திய அந்த உறவினர்களின் குழந்தைகள், மகள், தங்கைகள் என்று எல்லோருமே படித்து கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிடிக்காமல், கட்டாயத்திற்காக நான் அங்கு வேலைக்கு சென்றாலும் என் மனம் முழுக்க படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்றே 24 மணி நேரம் முழங்கியது. ஒரு வாரம் சென்றேன். என்னால் அதற்கு மேல் அங்கு வேலை செய்ய முடியவில்லை, காரணம் படிக்க வேண்டும் என்ற என் விருப்பம் மண்ணோடு புதைந்து போய்விடுமோ என்ற பயம் தான்.

அந்த ஒரு வாரத்திக்கு நான் வாங்கிய என் முதல் சம்பளம் ரூ.11.60. அப்போது மாத சம்பளம் எனக்கு என்னவாக இருந்து இருக்கும் என்று பாருங்கள்.  இப்போது ஐந்து இலக்க எண்ணில் சம்பளம் வாங்கினாலும், இந்த முதல் சம்பளத்தை மறக்கமுடிவதில்லை..மறக்கவும் விரும்பவில்லை.

அணில் குட்டி அனிதா:- கவிதா என்ன சொல்லவறீங்க.. சின்ன வயசுலேயே தையல் நல்லா தைக்க வரும் ன்னு சொல்றீங்களா?.. உங்களை விட மோசமா, படிக்க வழி இல்லாதவங்கள யோசிச்சி, வாய கப்புன்னு மூடுங்க.. ஓவரா சவுண்டு விட்டுக்கிட்டு!! அவனவன் சாப்பட்டிற்கு வழியில்லாமல் கஷ்ட படறான்.. நீங்க என்னடான்னா.....சின்ன விஷயத்தை ஓவரா பில்டப் குடுக்கறீங்க.. எப்படியோ.. யாரோ படிக்க வச்சாங்க இல்ல.. அப்புறம் என்ன?.. தாத்ஸ்..நீங்க வாங்க.....தத்துவத்த சொல்லுங்க..

பீட்டர் தாத்ஸ் :- It takes courage to push yourself to places that you have never been before.... To test your limits... To break through barriers.